திருப்பரங்குன்றம், ஆக. 31:மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள 94, 95, 96, 97 மற்றும் 99 ஆகிய வார்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதன்படி ஹார்விப்பட்டி பூங்காவில் 15வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்தில் பூங்கா மேம்பாட்டு பணிகள், சேர்மட்டான் குளம் கண்மாயில் உள்ள குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பாண்டியன் நகர் பூங்காவில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், சாலைகள் அமைப்பது குறித்தும், சொர்ணம் காலனி புளியங்குளம் கண்மாயினை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
மேலும் மூலக்கரை குடிநீரேற்று நிலையம் அருகில் அம்ரூத் குடிநீர் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு லோயர்கேம்ப் பகுதியிலிருந்து குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், நகர்நல அலுவலர் வினோத்குமார், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, மண்டல தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர்கள் உசிலை சிவா, இந்திராகாந்தி, விஜயா, சிவசக்தி ரமேஷ உதவி கமிஷனர் ராதா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.