மதுரை, ஜூன் 4: மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி லாரிகள் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் மதுரை மாநகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு-மேம்பாலம் அமைத்து தர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மதுரை ஒத்தக்கடையை அடுத்து அமைந்துள்ளது. இச்சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். இந்நிலையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி மணலை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், திருச்சியில் இருந்து மதுரை நோக்கி கொரியர் பார்சல்களை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரியும் வந்து கொண்டிருந்தன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வந்த லாரி மதுரை மாநகரப் பிரிவு நோக்கி வளைவதற்காக முற்பட்ட போது எதிரே வந்த சரக்கு லாரி வேகமாக மோதியதில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு லாரியின் பின்பக்க சக்கரம் ரோட்டில் இருந்து சில மீட்டர்கள் மேலே அந்தரத்தில் தூக்கின. சந்திப்பு பிரிவு என்பதால் வழக்கமாக அங்கு வாகனங்கள் இயல்பு வேகத்தை விட சற்று மெதுவாகவே வரும். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுனர்களும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை போலீசார், மீட்பு வாகனங்களை வரவழைத்து அதன் உதவியுடன் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்துவிபத்துக்குள்ளான லாரிகளின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மதுரை மாநகர தேசிய நெடுஞ்சாலை பிரிவில் அடிக்கடி வாகனங்கள் கடக்கும் போது விபத்துக்குள்ளாகின்றன. இங்கு பெரும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.