மதுரை, ஜூன் 16: மாவட்டத்தில் காய்கறி மார்க்கெட் பல இருந்தாலும், மதுரை மாநகர் பகுதியான கீழமாரட் வீதியில் வெங்காயம் மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வெங்காயம் வாங்க சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் முதல் பொதுமக்கள் குவிகின்றனர். கீழமாரட் வீதி வெங்காய வணிகர் சங்கத்தின் தலைவர் முகமது இஸ்மாயில் கூறியதாவது: தற்போது சின்ன வெங்காயம் முதல் ரகம் மொத்த விலையில் 10 கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது, சில்லரையில் முதல் ரகம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விலைபோகிறது. மீடியம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
பெரிய வெங்காயத்தில் முதல் ரகம் மொத்த விற்பனையில் 10 கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோ ரூ.20 முதல் ரூ.22 வரை விலை போகிறது. மகாராஷ்டிரா மற்றும் நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் வருகிறது. சின்ன வெங்காயம் தேனி மாவட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வருகிறது. பெரிய வெங்காயம் விலை தற்போது உயர வாய்ப்பில்லை. சின்ன வெங்காயம் விலை மழை அதிகரித்தால், வரத்து குறைந்தால் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.