மதுரை, அக். 14: மதுரை எம்.சத்திரப்பட்டி அருகே கருவனூரை சேர்ந்தவர் முத்துகருப்பாயி (65). இவர், நேற்று முன்தினம் தனது மகள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்னம்பலத்தின் மகன் தில்லையம்பலம், முத்துகருப்பாயியை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. மேலும், அவரது மகளின் வீட்டின் கதவையும் உடைத்துள்ளார். இதில் காயமடைந்த முத்துக்கருப்பாயி அளித்த புகாரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து தில்லையம்பத்தை கைது செய்தனர்.
அதேபோல், பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் தனது தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்ததை தட்டி கேட்டதால், சிலர் தன்னை தாக்கியதாக புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், ஜெகன், முத்தீஸ்வரன், கருப்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவதில் ஏற்பட்ட தகராறில், பொன்னம்பலம் தரப்பினருக்கும், வேல்முருகனின் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருமுறை ஏற்பட்ட மோதலில் பொன்னம்பலம், வேல்முருகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.