மதுரை ஜூன் 6: மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘குழந்தை இல்லாத தம்பதிகளின் நலன் கருதி ஆந்திரா, கேரளாவில் சில அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதுபோல் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தென்மாவட்டங்களை சேர்ந்த குழந்தையில்லா ஏழை தம்பதிகள் செல்வதற்காக அதிக நேரமும், பொருளாதாரமும் விரயமாகிறது.
எனவே, மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு அரசின் உறுதியளிப்பால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றம் மருத்துவ நிபுணர் அல்ல, என்றாலும் தேவை அதிகரிக்கும் சூழ்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி கருத்தரித்தல் மையங்களை கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மனுவை பரிசீலித்து செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையத்தை அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.