மதுரை, ஆக. 22: குரங்கு அம்மை பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ பகுதியில் பரவிய குரங்கம்மை நோய் பாதிப்பு, தற்போது உலகில் பல இடங்களில் பாதிப்புகள் அறியப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பானது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து நாடுகளின் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்து, குறிப்பாக விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவ குழுக்கள் அமைத்து சிறப்பு பரிசோதனை, கண்காணிப்பு பணிகள் வேகமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் பாதிப்பில் யாரும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை கூடுதல் கவனம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை அரசு மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்கான சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ் கூறும்போது, ‘‘மதுரை அரசு மருத்துவமனையின் பழைய பிரசவ வார்டு பகுதியில் காய்ச்சல் வார்டு செயல்பட்டு வரும் இடத்தில் கூடுதலாக குரங்கம்மை நோய்க்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகளுடன் கூடிய இதில் குரங்கம்மை நோய்கான முன்தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் ஒதுக்கப்பட்டு அறிகுறிகளுடன் பொதுமக்கள் எப்போது வந்தாலும் உடனடி சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் உள்ளனர்