மதுரை, மே 21: மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா ரூ.50 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து, வரும் ஜூலைக்குள் பணிகள் நிறைவடையும் நிலையில் முதன்முறையாக படகு குழாமில் காற்று நிரப்பிய பைபர் குடுவைகள் கொண்ட ‘பிலோட்டிங் செட்டி’ என்ற நவீன மிதவை நடைபாதை 500 சதுர மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் 550 ஏக்கர் பரப்பில் வண்டியூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கரையோர பூங்காவை மாநகராட்சி ரூ.50 கோடி செலவில் மறு சீரமைப்பு செய்து, பொழுதுபோக்கு மையமாக மாற்றி வருகிறது. கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டன.
மேற்புறம், வடபுறம் கரையோரத்தில் 3கிமீ தூரம் நடைப்பயிற்சி பாதை, மதுரையிலேயே முதன் முறையாக 3 கிமீ தூரத்திற்கு சைக்கிள் டிராக் எனும் மிதிவண்டிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தியானம், யோகா வளாகம், திறந்த வெளி சந்திப்பு அரங்கம், சிறுவர்களுக்கான சறுக்கு, ஊஞ்சல் வசதிகள், வெவ்வேறு 3 இடங்களில் கழிப்பறைகள், நிரூற்றுகள், மின்விளக்குகள், விதி வித பூக்கள், மூலிகைகளின் ஆயிரம் செடிகள், மரங்கள் நடுவது என பணிகள் வேகமடைந்துள்ளன. கண்மாய் வரத்துக் கால்வாயில் 4 சிறு பாலங்கள், இரு இடஙகளில் பிரமாண்ட பூங்கா நுழைவு வாயில்கள் ஏற்படுத்தப்படுகிறது.