மதுரை, ஆக. 19: மதுரை மேலமாசிவீதியில் நேற்று அதிகாலை பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலமாசிவீதி சத்தியமூர்த்தி தெரு பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமாக 60 ஆண்டுகள் பழமையான கட்டிடம் உள்ளது. இங்கு இனிப்பு, முறுக்கு தயாரிக்கப்பட்டு வந்தது. மதுரையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழைக்கு இந்த கட்டிடத்தின் சுவர் ஈரப்பதத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கடந்த ஒரு வாரமாக ஆர்டர் இல்லாததால், இனிப்பு, காரம் தயாரிக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில் கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நகருக்குள் பழமையான கட்டிடங்கள் கணக்கெடுத்து, மிக மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றும்படி வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.