மதுரை, ஆக. 21: மதுரையில் மாற்றத்தை நோக்கி டூரிஸ்ட் கேப் டிரைவர்கள்- உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்காவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அம்மனுவில், ‘பல்வேறு காரணங்களால் எங்கள் தொழில் நசிந்து வருகிறது. எங்களது சுற்றுலா வாகனங்கள் பரமக்குடி, ராமநாதபுரம் சாலைகளை கடக்கும் போதும், ராமேஸ்வரத்திலும் எந்தவித முன்னறிப்பும் இன்றி எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
எங்களது வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் போது ஓட்டுநர்கள் அனைத்து ஆவணங்களையும் எடுத்து காண்பித்தாலும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அபராதம் விதிப்பதோடு எங்களது ஓட்டுநர்களை அதிகாரிகள் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதும் நடக்கிறது. எங்களது ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் வாகனத்தின் ஆவணங்கள் சரியாக இல்லாத போது அதிகாரிகள் அபராதம் விதித்தால் ஏற்கிறோம். எனவே இதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நடவடிக்கைகள் மூலம் எங்கள் தொழிலை காப்பாற்றிட வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.