மதுரை, ஆக. 27: மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை கீரைத்துறையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் எஸ்ஐ திலகர் தலைமையில் போலீசார் சம்பவ இடமான செம்பூரணி ரோடு சுடுகாடு அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பெண் உள்பட 4 பேரை விரட்டிப் பிடித்தனர். இதில் ஒரு பெண் தப்பிச் சென்றார்.
விசாரணையில் பெருங்குடி எஸ்டிகே நகர் முனீஸ்வரன் என்ற முனியசாமி(28), கீரைத்துறை இருளப்பசாமி கோவில் தெரு, மணிகண்டன்(24), இதே பகுதியைச் சேர்ந்த 19வயது வாலிபர் , அவரது தாய் லட்சுமி(50) என்று தெரியவந்தது . காளீஸ்வரி என்பவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும், விற்பனை செய்த பணம் ரூ. 46,630, எடை மிஷின் ஒன்று, கட்டப்பை நான்கு, செல்போன் மூன்று, ஆட்டோ ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.