மதுராந்தகம், ஜூன் 6: மதுராந்தகம் புறவழி சாலையில் கார் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்த காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுராந்தகம் புறவழி சாலையில், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து 3 பேர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த காருக்கு பின்னால் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதியது. இதில், காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்து, ஜிஎஸ்டி சாலையின் நடுவில் நின்றது. விபத்தை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காரின் பின்பக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால் திருச்சி-சென்னை செல்லும் ஜிஎஸ்டி சாலை மார்க்கத்தில் வாகன நெரிசல் அதிகமாகி, சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து மதுராந்கதம் போலீசார் விரைந்து வந்து காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.