மதுராந்தகம், மே 31: மதுராந்தகம் அருகே டயர் வெடித்து நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே நின்ற மினி லாரியால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கரூரில் இருந்து சிமென்ட் பைப்புகளை ஏற்றிக்கொண்டு, நேற்று காலை மினி லாரி ஒன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, மதுராந்தகம் அடுத்த பாக்கம் அருகே வந்தபோது, மினி லாரியின் முன் டயர் வெடித்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றது.
இதனால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தரம் போலீசார், விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தில் சிக்கிய மினி லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த, விபத்தினால் மதுராந்தகம் அருகே 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.