தாம்பரம், ஜூன் 19: மதுரப்பாக்கம் காப்பு காடு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான செடி, கொடிகள மற்றும் மரங்கள் தீயில் கருகின. தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் காப்பு காடு உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் அங்குள்ள பெரும்பாலான மரங்கள், செடிகள் காய்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென காப்புக்காட்டில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தீ பரவியதால் விடிய விடிய போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் செடி-கொடிகள், மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரப்பாக்கம் பகுதி காப்பு காட்டில் தீ விபத்து
0