குடியாத்தம், நவ.1: குடியாத்தம் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே வாலிபர் ஒருவர் மதுபோதையில் இறந்து கிடந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், இறந்து கிடந்தவர் குடியாத்தம் போடிபேட்டை பகுதியை சேர்ந்த முத்து(35) என்பது தெரியவந்தது. குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி இவருடன் வாழாமல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த முத்து மதுபோதைக்கு அடிமையானதுடன், வேலை எதுவுக்கும் செல்லாமல் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகளவு மதுகுடித்ததில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.