‘‘கல்வி கற்பிக்கும் பல்கலையின் விருந்தினர் மாளிகையை கரன்சிக்காக கலவி நடக்கும் இடமாக மாற்றியது கொடுமையாக இருக்கே… எந்த மாவட்டம்… ’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து பல்கலை.யில் விருந்தினர் மாளிகை இருக்கிறது. இங்கு துறை சார்ந்த பேராசிரியர்கள், விஐபிகள், ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு வருகிற வெளியூர் மானியக்குழு உறுப்பினர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் தங்க வைக்கப்படுவது வழக்கம். இதற்கான கட்டணத்தை உரிய துறையினர், விருந்தினர் மாளிகையின் நிர்வாகத்திற்கு வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த காலங்களில் 2012ம் ஆண்டு முதல், இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படவில்லையாம். மாளிகையை நிர்வகிப்பவர்களோ, அவர்களது சொந்த தேவைக்காக இம்மாளிகையை, நட்சத்திர விடுதி போலவே கண்டபடி பலரும் வந்து தங்கி, ‘‘எல்லாம்’’ நடக்கும் இடமாக மாற்றி விட்டனராம். இதனால் சில அதிகாரிகள் ‘‘டைம் பாஸ்’’க்கும், ‘‘பார்ட்டி’’ நடத்தவும் என இங்கு தங்கிச் சென்றதும், இதற்கென கட்டணம் ஏதும் தராத நிலையில், பல்கலை. வருவாயும் பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம். கல்வித்துறைக்கே சம்பந்தமில்லாத பலரும் இங்கு வந்து தங்கிச் சென்றது, இங்குள்ள பேராசிரியர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. நட்சத்திர விடுதியாகவே மாற்றப்பட்டிருக்கிற, இந்த மாளிகையை திரும்பவும் மீட்டுத் தாருங்கள் என்று உயர்கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வரும் நிலையில் இழப்பு வருவாயை பல்கலை. தலைமையிலும், நிர்வகிப்பதில் இருந்தோரிடமிருந்து வசூலித்திட வேண்டுமென்பதே பேராசிரியர்களின் கோரிக்கையாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குடி குடியை கெடுக்கும் என்பது பழையதாகி போனது… மது பானம் மூலம் மாடி வீடு கட்டுவது புதுசு. ஆட்சி மாறியதால் டாஸ்மாக் வருமானம் போச்சே என்று புலம்பும் இலை கட்சி மக்கள் பிரதிநிதி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகரில் இலை கட்சி மக்கள் ஒருவர் உள்ளார். இவர், தனது பெயருக்கு முன்னால், பெண் கடவுள் பெயரை அடைமொழியாக கொண்டவராம். இவர், கடந்த 5 ஆண்டு காலமும் எம்எல்ஏவாக இருந்தார். தற்போதும் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 5 ஆண்டு காலத்தில் இலை கட்சி ஆட்சிப்பொறுப்பில் இருந்த காரணத்தால் இவர், கோவை மாநகர் மற்றும் மாநகரை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் `பார்’களில் புகுந்து விளையாடினார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் சரக்கு விற்கவும், மது குடிக்கவும் அனுமதி அளித்து, அதன்மூலம் கரன்சிகளை குவித்தார். மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என சாக்குபோக்கு சொல்லி, சாக்குப்பையில் கரன்சியை கட்டினார். கோவையில் சாதாரண வீட்டில் குடியிருந்த இவர் தற்போது, மாடி மீது மாடி கட்டி, ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். பல நேரங்களில் இவருக்கு பதிலாக, இவரது மகன் வசூல் எடுக்க துவங்கிவிடுவார். “அப்பா வந்தா என்ன… மகன் வந்தா என்ன… கொடுக்க வேண்டியதை கொடுங்கப்பா…’’ என தடாலடியாக பேசி, வசூல் எடுத்துச்சென்றார். ஆனால், இப்போது ஆட்சி மாற்றத்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. “முன்பு போலவே இப்போதும் எம்எல்ஏ பதவி உள்ளது, ஆனால், ஆட்சி இல்லையே… வசூல் போச்சே…’’ என தனது சகாக்களிடம் புலம்பி வருவதுதான் அந்த தொகுதியின் ஹாட் டாபிக்காக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் என்ன விசேஷம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார ஆபிசு, புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இயங்கி வந்துச்சு. இந்த கட்டிடம் பழுதடைஞ்சி காணப்பட்டதால, பழைய கட்டிடத்தை இடிச்சிட்டு, ₹5 கோடியில புதுசா வட்டார ஆபிசு கட்டுவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடி பணிகள் தொடங்கிச்சு. வட்டார ஆபிசு கட்டும் பணிக்காக கம்பி ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களை தரமற்றதா பயன்படுத்துறதா குற்றச்சாட்டு எழுந்திருக்கு. 2 மாடி கட்டிடத்துக்கு கனமான கம்பி பயன்படுத்தனுமாம். ஆனா, கனம் குறைவான கம்பியை பயன்படுத்துறாங்களாம். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னாடி, இரவோடு, இரவாக தரமற்ற பணிகள் இன்னும் வேகமா நடக்குதாம். அரைகுறை பணிகள் வெளிச்சத்துக்கு வந்துடுச்சாம். இதனால, தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளணும்னு சமூக ஆர்வலருங்க அரசுக்கு மனுக்கள் அனுப்பியிருக்காங்க. இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கணும்னு கூறப்பட்ட நிலையில, எந்த நடவடிக்கையும் எடுக்காம விட்டுட்டாங்களாம். காரணம் இலைகட்சி ஆதரவு கான்ட்ராக்டராம், இதனால அதிகாரிங்க பழைய பாசத்துல நடவடிக்கை எடுக்க தயங்குறாங்களாம்…’’ என்றார் விக்கியனந்தா.‘‘மருத்துவமனை நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்திய மருத்துவமனை முதல்வர் விருதுநகருக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளாராமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை, மரணங்கள் தொடர்பாக அடிக்கடி புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. கொரோனா நோயாளி ஒருவரது உடல் மாற்றி கொடுக்கப்பட்டதாம். அந்த பிரச்னை முடிவதற்குள் கொரோனா நோயாளிகள் 2 பேரது உடல்கள் வெட்டவெளியில் கொட்டும் மழையில் வைக்கப்பட்டிருந்தது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன. மேலும் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் ஒருவர் இறந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு போராடும் காட்சிகள் தொடர்பாக வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசு மருத்துவ கல்லூரி டீன் மீது அதிருப்தி தெரிவித்து சர்ச்சை எழுந்த நிலையில் அவர் கன்னியாகுமரியில் இருந்து விருதுநகருக்கு சென்றுவிட்டாராம்.. இதை கேட்ட பொதுமக்கள் இனியாவது கொரோனா சிகிச்சைகள் முறையாக நடந்தால் சரி..’’ என்று கூறியபடி செல்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. …
மதுபானத்தில் சம்பாதித்து மாடி வீடு கட்டிய இலை கட்சியின் மக்கள் பிரதிநிதி பற்றிச் சொல்கிறார் wiki யானந்தா
31