மதுக்கரை, ஏப்.14: சமரச தீர்ப்பாய தினத்தை முன்னிட்டு மதுக்கரை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பிரேம் ஆனந்த் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுக்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமரச தீர்ப்பாய தினத்தை முன்னிட்டு மதுக்கரை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மதுக்கரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பொதுமக்கள் மத்தியில் சமரச தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுக்கரை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தலைவர் பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நீதிமன்ற வளாகம், கடைவீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘சமரச தீர்ப்பாயத்தின் மூலம் நீண்ட காலமாக நடைபெற்று வரும் சொத்து பிரச்னை, உரிமை பிரச்னை, குடும்ப பிரச்னை, ஜீவனாம்ச பிரச்னை, செக் மோசடி வழக்கு, கம்பெனி தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த சமரச தீர்ப்பாயத்தின் மூலம் தீர்வு காணலாம். இதற்கு கட்டணம் கிடையாது’’ என விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் பசுபதி, வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் ரவீந்திரன், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் வினோத் ராஜ் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.