மதுக்கரை, செப்.6: கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மதுக்கரை நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதால், இதற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று திமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு துணை தலைவர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அப்போது பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, ரூ.3 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிலையில் அந்த கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பணி முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் கரங்களால் இந்த கட்டிடத்தை திறப்பு விழா செய்ய வேண்டும் என்று திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.