கோவை, ஜூன் 6: கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் போத்தனூர், வாளையார் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏ ரயில் பாதை 1.78 கி.மீ. தூரமும், ‘‘பி ரயில் பாதை 2.8 கி.மீ. தூரமும் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பி ரயில் பாதையில் வாளையாறு-எட்டிமடை இடையே 2 இடங்களில் காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது: மதுக்கரை அருகே காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க 2 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளதால், அவை எளிதாக கடந்து வருகின்றன.
மேலும் தண்டவாளம் அருகே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய அதிக நவீன தொழில்நுட்ப வசதியுடன் 12 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தண்டவாளத்திற்கு காட்டு யானைகள் வராமல் கடந்து செல்கின்றன. அதன்படி தற்போது வரை இந்த 2 சுரங்கப்பாதை வழியாக 2,700 முறை காட்டு யானைகள் குட்டிகளுடன் கடந்து உள்ளன. தற்போது தண்டவாளத்தை கடக்க காட்டு யானைகள் சுரங்கப்பாதையைதான் பயன்படுத்தி வருகின்றன.
பி டிராக் பகுதியில் இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் இருந்து, 800 மீட்டர் தூரத்தில் கூடுதலாக மற்றொரு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரெயில்வே துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ரெயில்வே துறையின் அனுமதி கிடைத்ததும் மூன்றாவது சுரங்கப்பாதை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.