மதுக்கரை, மே 22: கோவை மதுக்கரை அருகேயுள்ள அரிசிபாளையம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் பட்டுராஜா(51). இவர் அங்குள்ள மாரியம்மன் கோயில் வீதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்த பின்னர், கடையை பூட்டி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் கதவு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த பணம் ரூ.1,800 திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவர் மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அரிசிபாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த, அதே ஊரை சேர்ந்த விக்னேஸ்வரன்(21 பாஸ்கர்(23).
ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் பட்டுராஜாவின் மளிகை கடையை உடைத்து ரூ.1800 திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்கப்பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய கொள்ளையர்களை 4 மணி நேரத்தில் கைது செய்த மதுக்கரை போலீசாரை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.