தாம்பரம், ஜூன் 25: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ஒன்றிய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆவடியில் இருந்து 24 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பெருமாள்(40) என்ற ஓட்டுநர் சிட்லபாக்கம் சேமிப்பு கிடங்கிற்கு வந்தார்.
சேமிப்பு கிடங்கின் அருகே வந்தபோது சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சேமிப்பு கிடங்கின் மதில் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதனைக் கண்ட பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.