Friday, April 19, 2024
Home » மதர்லி டச் பொடிகள்

மதர்லி டச் பொடிகள்

by kannappan

நன்றி குங்குமம் தோழி ‘‘குடும்பத்துடைய பொருளாதாரம்தான் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து நாம என்ன செய்யணும் என்கிறதை தீர்மானிக்கிறது. அப்படியான சூழல்தான் என்னையும் இன்னைக்கு ஒரு பிஸினஸ் வுமனா மட்டும் இல்லாம குறைந்த செலவுல பலருக்கும் அவங்களுடைய உணவு வேலைகள்ல உதவக்கூடிய மனுஷியாகவும் மாத்தியிருக்கு’’ என்கிறார் கிரிஜா நடராஜன்.ஒரு பக்கம் அலுவலக வேலை, வீட்டுப் பராமரிப்பு, ஒரு அம்மாவாக குழந்தைகளின் தேவைகள் என பிஸியாக காலையில் பறந்து கொண்டு இருந்தாலும், நமக்கான சில மணி நேரங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த சில மணி நேரத்தை ஒரு தொழிலாக மாற்றியுள்ளார் கிரிஜா. ‘‘காலை வேளைகளில் நேரம் இருக்கிறதே இதில் நாம் ஏன் சாப்பாடு செய்து கொடுக்கக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிச்சேன். வீட்டு சமையலாக இட்லி, தோசை, கிச்சடி ஆர்டர் பெயரில் செய்கிறேன். அதுமட்டும் அல்ல சுமாராக 20க்கும் மேலான பொடி வகைகள், ஆர்கானிக் ஜூஸ் வெரைட்டிகளும் செய்து வருகிறேன். சொந்த ஊரு சென்னைதான். நானும் என் கணவரும் ஒரு கம்பெனியில வேலை செய்திட்டு இருந்தோம். அந்தக் கம்பெனியில மேலதிகாரி கூட மனஸ்தாபம். கணவர் வெளியேற கூடவே நானும் வெளிய வந்துட்டேன். நிச்சயம் நான் அங்கே இருந்தாலும் அடுத்து என் மேல பிரச்னைகள், கோபம் திரும்பும். எதுக்கு மனக்கஷ்டம். இப்படி முடிவு செய்து வேலைய விட்டு இருவருமே ஒரே நேரத்துல வெளியேறினோம். அடுத்த என்ன என்று யோசித்த போது, ‘ஏன் நீங்களே ஒரு கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது’ன்னு என் கணவரிடம் கேள்வி எழுப்பினேன். அவருக்கும் அந்த யோசனை பிடிச்சு இருந்தது. கம்பெனி ஆரம்பிக்க காலங்களும் நேரங்களும் கூடி வர எங்களுக்கான ஒரு நிறுவனம் ஒன்றை ஆரம்பிச்சார். ஒரு லேப்டாப், வீடுதான் அலுவலகம். சோபா தான் மீட்டிங் இடம். கம்பெனி புதுசு, ஆனால் எங்கள் சொந்த கம்பெனி என்கிற மனசு மட்டும் இருந்துச்சு. கம்பெனி ஆரம்பிச்சதும், உடனே பணம் பார்க்க முடியாது. குடும்பப் பொருளாதாரம் சிக்கலுக்கு ஆளாக, நானே இறங்கி இதை சரி செய்யணும்னு முடிவு செய்தேன். கிடைக்கற வேலை எதுவுமே விடாம செய்ய ஆரம்பிச்சேன். எனக்கு முதல் குழந்தை பிறக்கறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வரைக்கும் நான் ஆபீஸ்ல வேலை செய்திட்டு இருந்தேன். அவ்வளவு வெறி, முன்னேறணும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்துச்சு. மேற்கொண்டு சொந்தக் கம்பெனி முன்னேற நிச்சயம் நேரம் எடுக்கும். அதுவரை… குழந்தைகள் படிப்பு, பராமரிப்பு இப்படி நிறைய கேள்விகள்? அப்போதான் இந்த ஆர்கானிக் பொடிகள், ஆர்கானிக் ஜூஸ்கள் ஏன் நாமளே செய்து விற்பனைக்குக் கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதிலேயும் முடிஞ்ச வரை ஏரியா வியாபாரிகள், கடைகள்ல மட்டும்தான் வாங்குவேன். சூப்பர் மார்க்கெட்ல கண்களுக்கு கலரா தெரியற மூலப்பொருட்களை வாங்கவே மாட்டேன். மேலும் இட்லி, தோசை, கிச்சடி இப்படி சாப்பாடு ஆர்டர்களுக்குக் கூட ஏதோ ஒரு அரிசி, ஏதோ ஒரு பருப்புன்னு வாங்கி செய்ய மாட்டேன். நான் என்ன என் பசங்களுக்குக் கொடுக்கறேனோ அதைத்தான் நான் சமையலுக்கும் பயன்படுத்துறேன். இதுக்கு நான் பெரிதா புரமோஷன், விளம்பரங்கள் கூட முயற்சி செய்துக்கலை. பல வருடங்களா என் நண்பர்கள், உறவினர்கள், தெரிஞ்சவங்க இவங்க மூலமா பரவி ஒவ்வொரு வாடிக்கையாளர்களா வராங்க’’ என்னும் கிரிஜா நடராஜன் தன்னுடைய சிறப்பான பொடிகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். ‘‘‘மதர்லி டச்’, என்னுடைய சமையல் அப்படித்தான் இருக்கணும் என்கிறதுல கறாரா இருப்பேன். பெரும்பாலும் ஆர்கானிக், நேரடி வியாபாரிகள் கிட்ட வாங்குகிற பொருட்கள், காய்கறிகள்தான் என் குறிக்கோள். இட்லி பொடி, பருப்புப் பொடி, சாம்பார் பொடி, கருவேப்பிலை பொடி, கொள்ளு பொடி, மிளகுக் குழம்பு பொடி, ரசப் பொடி, அரச்சுவிட்ட சாம்பார் பொடி, புதினா பொடி, சாதா சாம்பார் பொடி, எள்ளுப் பொடி, மணத்தக்காளி வத்தல் பொடி, சுண்டைக்காய் பொடி இப்படி ஐம்பது வகையான பொடிகள் தயாரிக்கிறேன். அடுத்து ரவா தோசை மிக்ஸ், பிசரட்டை மிக்ஸ்களும் கிடைக்கும். வெறுமனே தண்ணீர் சேர்த்து ஒரு அரைமணி நேரம் விட்டு தோசை ஊத்தி எடுக்கலாம். தேவைப்பட்டா வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக்கலாம், தயிர் கலந்துகிட்டா இன்னும் கொஞ்சம் புளிப்பு சுவைக் கொடுக்கும். என்னுடைய ஒரே குறிக்கோள் என்னை மாதிரியே வேலைக்குப் போற பெண்கள் அசந்து வீட்டுக்குள்ளே நுழைந்தா சமையல் அவங்களை மேலும் சோர்வாக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகமா 40 நிமிடங்கள் இதுக்குள்ள எப்படி சமைக்கலாம் இதுக்கு என்னால என்னென்ன செய்து பொடிகளா, மிக்ஸ்களா கொடுக்க முடியுமோ அதைத்தான் நான் செய்யறேன். மேலும் வேலைக்குப் போற பசங்க, என் அலுவலகத்திலேயே ஊர் விட்டு ஊர் வந்து தங்கி வேலை செய்கிற என் பையன்களுக்கு எப்படி சமைச்சுக் கொடுப்பேனோ அதே பாணியிலே வீட்டுச் சாப்பாடு செய்து கொடுக்கறேன். விழாக்களுக்கு, வீட்ல சின்னதா ஒரு விசேஷம் என்றாலும் என் கிட்ட தெரிந்த மக்கள் ஆர்டர் கொடுத்து சாப்பாடு வாங்குவாங்க. இஞ்சி எலுமிச்சை, அன்னாசி, ஆப்பிள். இப்போதைக்கு இந்த மூணு பழ ஜூஸ்கள் தயாரிக்கிறேன். அதாவது ரெடிமேடா என்கிட்ட ஆர்கானிக் முறைப்படி தயாரிக்கப்பட்ட பேஸ்ட் இருக்கும். அதை அப்படியே தண்ணீர்ல கலந்தா ஜூஸ் ரெடி. இடியாப்பம், ராகி இடியாப்பம், புட்டு இந்த மாவு வெரைட்டிகளும் கிடைக்கும். அடுத்ததா என்னுடைய ஒரே குறிக்கோள் சொந்த ஊர விட்டு, சொந்தம் பந்தங்களை விட்டு இங்கே வேலைக்காக தங்கி இருக்கற பசங்களுக்கு வீட்டுச் சாப்பாடு எப்படியாவது கொண்டு போய் சேர்க்கணும். இதுக்குதான் என்னுடைய அத்தனை திட்டங்களும் நான் செய்திட்டு இருக்கேன். என் குடும்பமும் என்னை அதிகமா ஊக்குவிச்சு, நிறைய தோள் கொடுக்கறாங்க’’ -மனநிறைவாக சொல்கிறார் இந்த மதர்லி வுமன் கிரிஜா நடராஜன்.  தொகுப்பு: ஷாலினி நியூட்டன்படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

You may also like

Leave a Comment

16 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi