வலங்கைமான்: போதிய வளம் இல்லாத மண்ணில் அமுத கரைசலை பயன்படுத்துவதன் மூலம் வளமான மண்ணாக மாற்றி அதிக மகசூல் பெறலாம் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
பயிர்களின் வளர்ச்சி மற்றும் நல்ல மகசூல் பெற ஊக்கசத்துவாக அமிர்தகரைசல் பயன்படுகிறது. நாட்டுப்பசுஞ் சாணம் – 10 கிலோ, நாட்டுப்பசு கோமியம் – 10 லிட்டர், கருப்பட்டி (அ) கரும்பு வெல்லம் – 250 கிராம், தண்ணீர் – 200 லிட்டர் ஆகிய பொருட்கள் அமுத கரைசல் தயார் செய்வதற்கு தேவைப்படுகிறது. முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசுஞ்சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசல் ஆகும்.