சமயபுரம், பிப்.12:மண்ணச்சநல்லூர் பாலமுருகன் கோயிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் 2,500 பக்தர்கள் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தைப்பூச விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு. இதையடுத்து மண்ணச்சநல்லூர் சுற்றியுள்ள 35 ஊராட்சிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொள்ளிடம் திருகாவேரி ஆற்றில் தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் முருகனுக்கு பால், பழம், சந்தனம், பன்னீர் கொண்டு 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை 6 மணியளவில் மண்ணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி காவடி, அலகு குத்தி கடைவீதி பகுதியை சுற்றி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இந்த கட்டுக்கடங்கா கூட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.