சமயபுரம், நவ.19: சமயபுரம் நெ.1 டோல்கேட் அருகே திருநங்கை கொலை சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி 5 தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேல காவல்கார தெருவை சேர்ந்த மணிமேகலை (30) திருநங்கையான இவர் கடந்த 15ம் தேதி இரவு நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே உள்ள வாழவந்தபுரம் ஒட்டியுள்ள தோப்பில் மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் தலைமையில் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கத்தியில் படிந்துள்ள கை ரேகைகளை சேகரித்து குற்றவாளியை பிடிக்க போலீசார் துப்பு துலக்கினர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிப்பதற்காக மாவட்ட எஸ்.பி வருண் குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைத்து போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து மணிமேகலை பயன்படுத்திய செல்போன் கைப்பற்றி அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் மற்றும் சந்தேகத்திற்குறிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருநங்கை கொலை வழக்கில் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கொளையாளியை விரைவில் பிடி படுவார்கள் என திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரித்துள்ளார்.