*2 பேர் உடல்களும் இன்று பிரேத பரிசோதனைகுளச்சல் : மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் மெல்பின் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32)என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலை சசிகலா குழந்தை மற்றும் தன் தாயாருடன் ஒரு வாடகை ஆட்டோவில் காப்புக்காட்டில் ஒரு இடத்தில் பிரசன்னம் பார்க்க சென்றார். பின்னர் தாயாரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு சசிகலா அதே ஆட்டோவில் குழந்தையுடன் மண்டைக்காடு பகுதிக்கு சென்றார். செல்லும் வழியில் மதியம் சாப்பிடுவதற்கு பிரியாணி பொட்டலம் வாங்கினார். மதியம் மண்டைக்காடு அருகே வெட்டுமடை கடல் பகுதிக்கு சென்ற சசிகலா அங்கு சாப்பிட்டு விட்டு கையை கழுகிவிட்டு வருவதாக ஆட்டோ டிரைவரிடம் கூறிவிட்டு சென்றார். உடன் தன் குழந்தையையும் அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் சசிகலா திரும்பி வராததால் ஆட்டோ டிரைவர் பீதியடைந்தார். அவர் அங்கு வந்த வாலிபரிடம் ஒரு தாயும், குழந்தையும் கை கழுவ சென்றது குறித்து கூறினார். இதை கேட்ட வாலிபர் விரைந்து சென்று கடலில் பார்க்கும் போது சசிகலா கடல் மிதந்து கிடந்தார். உடனே அந்த வாலிபர் கடலில் குதித்து சசிகலாவின் உடலை மீட்டு கரை சேர்த்தார்.குழந்தையை காணவில்லை. குழந்தை கடல் நீரில் மூழ்கி இறந்தது. தகவலறிந்த குளச்சல் மரைன் போலீசார் விரைந்து சென்று புதூர் மீனவர்களின் உதவியுடன் குழந்தையை தேடினர். மீனவர்கள் கட்டுமரங்களில் சென்று தேடினர். இதற்கிடையே தகவலறிந்த சசிகலா குடும்பத்தினர் வெட்டுமடை கடல் பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு சசிகலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்காக சசிகலாவின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து நேற்றும் 2 வது நாளாக குழந்தையை மீனவர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இவர்களுடன் முத்து குளிக்கும் மீனவர்களும் சேர்ந்து தேடினர். இதற்கிடையே நேற்று பகல் பத்மநாபபுரம் சப் – கலெக்டர் கவுசிக் சம்பவ இடம் சென்று தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் மீனவர்கள் குழந்தையை தேடி வந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மண்டைக்காடு கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பக்தர் ஒருவரின் காலில் ஏதோ தட்டுப்பட்டது.உடனே அவர் மூழ்கி பார்க்கும்போது ஒரு குழந்தையின் உடல் என தெரிய வந்தது. உடனே மீனவர்களின் உதவியுடன் உடலை மீட்டு கரை சேர்த்தனர். இதற்குள் மாலத்தீவிலிருந்து சசிகலாவின் கணவர் மெல்பின் ஊர் வந்து சேர்ந்தார். ஊருக்கு வந்த மெல்பின் வெட்டுமடை கடல் பகுதிக்கு வந்தார். அங்கு குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் குழந்தையின் உடலையும் மரைன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், குழந்தை இருவரது உடல்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கணவர் மெல்பினிடம் ஒப்படைக்கப்படுகிறது….