மண்டபம், ஆக.13: மண்டபம் ஒன்றிய பகுதியில் மீன்வளம்,தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து மாநில தலைமை அரசு செயலர் ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில், அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ராமேஸ்வரம், அரிச்சல்முனை, தனுஷ்கோடி, குந்துக்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெறும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரமுடையான் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறையின் மூலம் இயங்கி வரும் அரசு பழப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கன்றுகள் வளர்ப்பு குறித்தும் பண்ணையை விரிவாக்கம் செய்வது குறித்தும் விளக்கம் கேட்டு ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது எஸ்பி சந்தீஷ், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.