கரூர், நவ. 28: தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகத்தில் மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் முக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வால்காட்டுபுதூர் முதல் நத்தமேடு வரை செல்லும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியினர் கரூர் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ், கட்டுமான பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் வால்காட்டு புதூர் முதல் நத்தமேடு வரை செல்லும் மண் சாலையில் பைக் மற்றும் நடந்தும் செல்கின்றனர்.
இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்பு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக தார்ச்சாலையாக மாற்றவில்லை. எனவே, மண்சாலையை தார்சாலையாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.