திருச்சி, ஜூலை 23: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 20 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகி சமூகத்தினரிடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியுள்ளது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம், விவசாய சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கனல் கண்ணன், எஸ்.எப்.ஐ மாவட்ட தலைவர் சூர்யா, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகை இட முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி 20 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர்.