காங்கயம், ஆக.7: மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதலைக் கண்டித்து காங்கயத்தில் கிறிஸ்தவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், காங்கயம் வட்டார அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போதகர் சாமிநாதன் தலைமை வகித்தார். சிஎஸ்ஐ ஆலய குரு ஏர்னெஸ்ட் முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காங்கயம் பகுதி செயலாளர் ரா.பி.ஜான்நாக்ஸ், காங்கிரஸ் கட்சியின் காங்கயம் வட்டாரத் தலைவர் சிபகத்துல்லா, கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி தங்க டேனியல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மக்களின் உயிருக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு வழங்குவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும், மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்கத் தவறிய பிரதமர் பதவி விலக வேண்டும், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் மதவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இதில், கிறிஸ்தவ சபை போதகர்கள் ஆனந்த், கிறிஸ்டோபர், பிரகாஷ், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.