தஞ்சாவூர், ஆக.2: மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்தில், அமைதியை நிலைநாட்ட மத்தியில் ஆழும் பாஜ அரசு எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதற்கு மோடி அரசே பொறுப்பு என்று குற்றம் சுமத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று தஞ்சாவூர் ரயிலடி முன்பு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மூகாம்பிகை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஆதித்தமிழர் பேரவை கெளரவ தலைவர் நாத்திகன் துவக்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் திராவிட தமிழர் கட்சி தலைவர், வழக்கறிஞர் இளமதி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். முடிவில் ஆதித்தமிழர் பேரவை இளைஞர் அமைப்பு நிர்வாகி பிரேம்நிவாஸ் நன்றி கூறினார்.