குளச்சல், ஜூன் 11: மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை (85). மரம் வெட்டும் தொழிலாளி. தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு திருநயினார்குறிச்சி- செதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. வேகமாக வந்ததால் டெம்போவின் பின் கதவு திடீரென திறந்தது. இந்த கதவு, நடந்து சென்ற செல்லத்துரை மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதனால் தலையில் படுகாயமடைந்த செல்லத்துரை உயிருக்கு போராடினார். உடனே அவர் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செல்லத்துரையின் மகன் கிருஷ்ணன் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விபத்து ஏற்படுத்திய டெம்போவை ஓட்டிய டிரைவர் அழகியமண்டபம் பரைக்கோடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி அருகே டெம்போவின் கதவு திடீரென திறந்ததில் முதியவர் படுகாயம்
0