போச்சம்பள்ளி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே எம்.நடுப்பட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக, மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, நடுப்பட்டு துலாநிதி படுகையில், ஒரு கும்பல் கனரக இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் 4 யூனிட் மணல் கடத்துவது தெரிய வந்தது. உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் கும்பல் ஓட்டம் பிடித்தது. இதையடுத்து, கனரக வாகனம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக தப்பி ஓடிய லாரி உரிமையாளரும், டிரைவருமான திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த வினோத்(30) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.