திருவாரூர், மே 26: திருவாரூர் அடுத்த கல்யாண மகாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மணல்மேடு புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் வேப்பிலை மாலை கட்டி அம்மனுக்கு செலுத்தினால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகம் இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி பூச்சொரிதல் சக்தி கரகம் விழா உடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உற்சவம் நடைபெற்று வந்தது. நேற்று அம்மனுக்கு சீர்வரிசை எடுக்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணன் குளம் சிவன் கோவிலில் இருந்து பெண்கள் அனைத்து வகையான பழங்களைக் கொண்டு 121 தாம்பாலாத்தில் மேள, தாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து சீர்வரிசை பொருட்களை அம்மன் பாதத்தில் வைத்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புற பாடல் இசைக்கு கும்மி அடித்து நடனம் ஆடினர். இதனை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர்.