அறந்தாங்கி: மணமேல்குடி பகுதியில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி பகுதியில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டது தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அசேன் மற்றும் ஹீமாயூன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மணமேல்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நூர்முகமது (26) ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் (30) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை துரிதமாக விசாரணை நடத்தி சமூக விரோதிகளை விரைவில் கைது செய்த, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்ய மணமேல்குடி போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.