மணப்பாறை, நவ.21: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வேளாண்துறை சார்பில் இயற்கை முறை விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
மணப்பாறை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2 குழுக்களும் கலைஞரின் அனைத்து கிராம வேளாளர் வருஷத் திட்ட கிராமங்களில் துவக்கப்பட்டு 40 விவசாயிகள் கொண்ட குழுக்களாக செயல்பட்டு வருகிறது. இந்த விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் முறைகளான இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி வேளாண்த் துறை சார்பில் நேற்று அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் விதைச்சாறு உதவி இயக்குனர் நளினி அங்கக வேளாண்மை குறித்து பயிற்சி அளித்தார்.
அங்கக வேளாண்மையில் சிறப்புகள் நன்மை தீமைகள் குறித்தும், அதன் சந்தை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறினார். இதனால் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினர் உருவாக்கலாம் எனவும் தெரிவித்தார். விதை சான்றுள்ள ரகுபதி, இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யா, மண்புழு உரம், மீன் அமிலம், அமுத கரைசல், ஜீவாமிர்தம் ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதனால் மண்ணில் ஏற்படும் நுண்ணுயிர் பெருக்கம் குறித்தும் விளக்கினார். மணப்பாறை வேளாண் அலுவலர் கண்ணன் வரவேற்றார். துணை வேளாண்மை அலுவலர் சிவக்குமார் முடிவில் நன்றி கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் முகமது நசீர் மற்றும் சரண்யா, தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தியா ஆகியோர் செய்திருந்தனர்.