மணப்பாறை, ஜூன் 11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது பூ ஏற்றி வந்த லாரி மோதியதில் தம்பதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செக்கணம் ஊராட்சி கொசவபட்டியை சேர்ந்தவர் கணேசன்(58). இவர் வையம்பட்டியில் பருத்தி மண்டி கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி(48). இவர் செக்கணம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். தம்பதியினர் இருவரும், டூவீலரில் வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு திண்டுக்கல் – திருச்சி தேசியநெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து பூ ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லோடு லாரி மோதியதில் தம்பதியினர் இருவருக்கும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வையம்பட்டி போலீஸார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். விபத்து குறித்து லாரி ஓட்டுனரான விழுப்புரம் வடமலை மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.