குடியாத்தம், ஆக.31: குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பள்ளி கிராமத்தில் மடத்தின் பீரோ உடைத்து 10 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடுச்சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பள்ளி கிராமத்தில் வள்ளிமலை ஆதீனம், குரு மகாராஜ் சிவானந்த வாரியார் குமாரமடம் வைத்து நடத்தி வருகிறார். மடத்தின் வளாகத்தில் கோயிலும் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஆதின அறை பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை கண்டதும் ஊழியர்கள் அறையின் அருகே சென்ற போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அறையில் இருந்து தப்பியோடினார்கள். இதனால் சந்தேகமடைந்த உழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது 3 பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி, பூஜை பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வேலூர் மாவட்ட கை ரேகை பிரிவு போலீசார் மடத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.