மஞ்சூர், ஆக.12: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்தனர். பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்கள். இதில் 400க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பலர் மீட்கப்பட்ட நிலையில் காணமல் போன பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களுடன் அனைத்து கடைக்காரர்களின் பங்களிப்பாக கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.31 ஆயிரத்து 150க்கான காசோலை வழங்கப்பட்டது. நிவாரணப்பொருட்களை சங்க தலைவர் சிவராஜ் தலைமையில் நிர்வாகிள் பாரூக், அம்மன்ரவி, சுகு, மணி மற்றும் உறுப்பினர்கள் வயநாடு பகுதிக்கு னெ்று அங்கு முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நேரில் வழங்கினார்கள்.