தர்மபுரி, அக்.26: தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 9ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் 8மாத பயிர் என்பதால், விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். தற்போது தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் நல்ல நிலையில் வளர்ந்து உள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி அறுவடை ஜனவரி மாதம் தொடங்குகிறது. வருடத்திற்கு வருடம் மஞ்சள் சாகுபடி பரப்பு, தர்மபுரி மாவட்டத்தில் உயர்ந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் மஞ்சள் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மஞ்சள் பணப்பயிர் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். தென்மேற்கு பருவமழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். தற்போது உள்ள பூமி ஈரப்பதத்தால், மஞ்சள் பயிர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் அறுவடை தொடங்கும்,’ என்றனர்.