கிருஷ்ணகிரி, அக்.27: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மஞ்சப்பை குறித்து கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்து பேசுகையில், ‘பூமிக்கு தீமை தரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். பழைய மரபுபடி அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ரவி, பவுன்ராஜ், வாசவி, திவ்யா, மகாலட்சுமி, ஹசீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச் சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி செய்திருந்தார்.