பென்னாகரம், ஜூன் 11: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் 400 பரிசல் ஓட்டிகளும், 350க்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளர்களும் உள்ளனர். இங்கு வேலை செய்யும் மசாஜ் மற்றும் பரிசல் ஓட்டிகளுக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நீண்ட காலமாக அடையாள அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மசாஜ் தொழிலாளர்களும் பரிசல் ஓட்டிகளும் அடையாள அட்டையை புதுப்பித்து தருமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனால், கலெக்டர் சதீஷ் உத்தரவின் பேரில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் அனைவரும், அரசு வழங்கிய அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மருத்துவ இணை இயக்குனர் சாந்தி அறிவுறுத்தலின்படி, நேற்று ஒகேனக்கல் பகுதியில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக இலவசமாக முழு உடல் பரிசோதனை நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் கனிமொழி தலைமையில், டாக்டர் பாபு மற்றும் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் பென்னாகரம் பிடிஓ மணிவண்ணன், கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன், அரசு மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.