கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஏனநல்லூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஏனாதிநாத நாயனார் குருபூஜை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் அருகில் ஏனநல்லூர் கிராமத்தில் உள்ள கற்பகம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், ஆறாம் நூற்றாண்டில் சிவதொண்டாற்றிய திருநீற்றில் பேரன்பு கொண்டு வாழ்ந்து தனது உயர்ந்த பக்தியால் இறைவனுடன் நிறைந்த 63 நாயன்மார்களில் ஒருவரான, ஏனாதிநாத நாயனாரின் குருபூஜை நேற்று நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி, அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பாக நேற்று காலை இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள் மற்றும் ஏனாதிநாத நாயனார் ஆகிய மூர்த்திகளுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் நடைபெற்று தீபதூப ஆராதனைகளும், அதனைத்தொடர்ந்து, மாலை உற்சவர் வீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஏனாதிநாத நாயனார் அவதரித்த தலமான ஏனநல்லூரில் ஆண்டுதோறும் நாடார் குருபூஜையாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.