காரைக்குடி, ஜூன் 11: காரைக்குடி மாநகராட்சியில் மக்கள் பணிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆணையர் சங்கரன் தலைமை வகித்தார். துணைமேயர் நா.குணசேகரன் முன்னிலை வகித்தார். மேயர் முத்துத்துரை அலுவலர்களுக்கு வாக்கி டாக்கியை வழங்கி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். உள்ளாட்சி பகுதிகளில் தேவையான வளர்ச்சி திட்டங்கள் அனைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் களத்திற்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
நமது மாநகராட்சியை பொறுத்தவரை எண்ணற்ற வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் உரிய நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் பணிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து, மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சியில் உள்ள பொதுசுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய்பிரிவு உட்பட்ட அனைத்து அலுவலர்களையும் உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. 42 வாக்கி டாக்கி வாங்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 10 வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு மக்கள் பிரச்னையை தெரிவிக்க வசதியாக அமையும், என்றார் .