கிருஷ்ணகிரி, ஜூலை 9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 404 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டன. இதில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டு ₹3.72 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம், சமாதான நிலை மற்றும் சமரசம் மூலம், மக்களின் பிரச்னைகளை தீர்க்க, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ, சமரச முறையில் தீர்வுகாண, மக்கள் நீதிமன்றங்களுக்கு அனுப்பலாம். இது உரிமையியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 89ன் கீழ் வருகிறது. இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையாகும்.
லோக் என்பது மக்களையும், அதாலத் என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். மக்கள் நீதிமன்றம் என்ற எண்ணத்தை முன்மொழிந்ததில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.பகவதி என்பவருக்கு முதன்மையான பங்குண்டு. மக்கள் நீதிமன்றம் முதன் முதலில், குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில், கடந்த 1982 மார்ச் 14ம் தேதி நடந்தது. இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கு வர இருக்கும் வழக்குகளுக்கும் தீர்வு காணலாம். இங்கு தீர்வு காணப்பட்டால், அதற்கு மேல் மேல்முறையீட்டிற்கு போக முடியாது. இதில், காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக்கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2013 நவம்பர் 23ம் தேதி, வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் மெகா லோக் அதாலத், நாடு முழுவதும் நடைபெற்றது. வட்டார அளவிலான கீழமை நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை, நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த அதாலத் நடத்தப்பட்டது. ஒரே நாளில் இந்தியா முழுவதும் 35 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.
அதே போல், சேலத்தில் கடந்த 2014 டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில், சுமார் 50 ஆயிரம் வழக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 42,695 வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் மூலம் சமசர தீர்வு காணப்பட்டன. இந்த வழக்குகளில் ஏற்பட்ட தீர்வுகள் மூலம், இழப்பீட்டு தொகை ₹31 கோடியே 10 லட்சம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) வசந்தி தலைமை வகித்தார்.
இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வாரிசு உரிமை, வங்கி வழக்குகள் மற்றும் சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டது. இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வாஹ் அமகது, மாவட்ட சட்ட ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர் மற்றும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் பங்கேற்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில், 404 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 56 வழக்குகளுக்கு ₹3 கோடியே 71 லட்சத்து 91 ஆயிரத்து 629க்கு தீர்வு காணப்பட்டது.