புதுச்சேரி, மே 31: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு ஆண்டுக்கு ரூ.400 கோடி வரி வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மதுபான விலையை தொடர்ந்து நில வழிகாட்டு மதிப்பு, பதிவு கட்டணங்களும் விரைவில் அதிகரிக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியில் கலால்துறை மூலம் உயர்த்தப்பட்ட மதுபானங்கள் விலை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வருவாயை அதிகரிக்க கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மதுபானங்கள் மீது கலால் வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உயர்வின் மூலம் ஐஎம்எப்எல் வகை மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஜின், ரம் ஆகிய 750 மி.லி. மதுபான பாட்டில்களுக்கு, ரூ. 10 முதல் ரூ. 47 வரையும், 180 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ.3 முதல் ரூ. 11 வரையும், பீர் 650 மி.லி. பாட்டில்களுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரையும், ஒயின் 750 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ.13 முதல் ரூ.26 வரையும் குறைந்தபட்சம் உயர வாய்ப்புள்ளது.
இந்த வரி உயர்வின் மூலம், புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்று கலால் துணை ஆணையர் தெரிவித்தார். இந்த மதுபான விலை உயர்வுகளுக்குப் பிறகும், பிரபலமான மதுபானங்களின் விலைகள் அருகிலுள்ள தமிழகத்துடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், மதுபான தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம், மதுபானங்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரியை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
உரிமக் கட்டணத்தை உயர்த்தும் வகையில், புதுச்சேரி கலால் (திருத்தம்) விதிகள், 2025 இல் ஒரு திருத்தம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் மறுசீரமைக்கப்பட்ட விகிதங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி கிடைப்பதற்கு முன்பு மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசு ஏற்கனவே 100 புதிய ரெஸ்டோ பார்களை அனுமதித்துள்ளது. புதிய டிஸ்டில்லரி யூனிட்களுக்கு உரிமங்களை வழங்க காத்திருக்கிறது.
இது முறைகேடுகள், ஊழலுக்கு வழி வகுக்கும் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், ஆண்டுக்கு ரூ 400 கோடி வரை கூடுதலாக வருவாயை ஈட்டவே அரசாங்கம் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, மாநில கலால் வரியிலிருந்து கிடைக்கும் வருவாயானது, புதுச்சேரி மாநிலத்தில் சொந்த வருவாயில் 23 சதவீதத்தை பங்களிக்கிறது. இது மின்சாரத் துறை 34.18 சதவீதம் மற்றும் வணிக வரி 32.54 சதவீதத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. 2025-26ம் ஆண்டுக்கு மதுபான வரி வரிவாய் 1,800 கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஜனவரி 1 முதல், யூனியன் பிரதேசம் முழுவதும் எரிபொருள்கள் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி பெட்ரோலுக்கு தோராயமாக 2.44 சதவீதம் மற்றும் டீசலுக்கு 2.57 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரசாங்கத்திற்கு அதிக சொந்த வருவாயை ஈட்டுவதற்காக, சில வகையான வாகனங்களின் விலை உட்பட, வழிகாட்டி நிலப் பதிவேட்டின் மதிப்பு, பதிவுக் கட்டணங்களை கணிசமாக உயர்த்தவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அரசின் வரி வருவாய் அதிகரிப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் முதியோர் உள்ளிட்ட உதவித்தொகைகள் உயர்வு, குடும்ப தலைவிகளுக்கு சிவப்பு அட்டைக்கு ரூ.2500, மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, காஸ் மானிய திட்டம், பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி திட்டம், 2 கிலோ கோதுமை, ஆதி திராவிட மாணவர்களுக்கு முழு கட்டணத்தை ஏற்பது போல மீனவ மக்களுக்கும் ஏற்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு நிதி வேண்டும். மத்திய அரசு மானியமாக ஒதுக்கும் நிதியில் இத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே மாநில வருவாயை அதிகரிக்கும் நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக வரியை கூடுதலாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது, என்றார்.