பெரம்பலூர், ஜூன். 24: பெரம்பலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்த்தில் 526 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார்.
இதனையொட்டி கலெக்டர் அலுவலக முகப்பு வராண்டாவில் மனு கொடுக்கக் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப்பெற்றார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்ற பயணாளிக்கு 15 நிமிடங்களில், முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு அடையாள அட்டையினையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 10 பயணாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 526 மனுக்கள் பெறப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதி திராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், தாட்கோ மேலாளர் தகவியரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.