விருதுநகர், மார்ச் 25: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், ரேசன் கார்டு, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 75 கைம்பெண்களுக்கு தலா ரூ.7500 வீதம் மொத்தம் ரூ.5.63 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், தனியார் வங்கியின் சமூக நலனுக்கான பங்களிப்பு நிதியின் கீழ் மாவட்டத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் 43 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2.58 லட்சம் மதிப்பிலான 50 அலுமினிய பால் கேன்களையும் வழங்கினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.