ஈரோடு, பிப்.25: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 352 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 352 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களை பெற்ற கலெக்டர், உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், கடந்த முறைந்த நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.