விருதுநகர், அக்.31: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 400 மனுக்கள் பெறப்பட்டது.மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார்.
துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.10,500 வீதம் ரூ.21 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ ரவிக்குமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, நேர்முக உதவியாளர் முத்துக்குழுவன் உள்பட பலர் பங்கேற்றனர்.