தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய தொழில் திறன் பள்ளி பயிற்றுநருக்கான திறன் சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பங்கேற்று தேர்ச்சியடைந்த 6 பயிற்றுநருக்கான கொத்தனார் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் மற்றும் 2 பயனாளிகளுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் கீழ் ஓட்டல் மற்றும் மீன் வளர்த்தல் மற்றும் விற்பனை நிலையம் அமைக்க தலா ரூ.1 லட்சம் காசோலையையும் கலெக்டர் லட்சுமிபதி வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் இயற்கை மரணம்
உதவித்தொகை 22 நபர்களுக்கு ரூ.3,74,000, விபத்து மரணம் உதவித்தொகை 2 நபர்களுக்கு ரூ.4 லட்சம், வங்கி கடன் மானியம் 10 நபர்களுக்கு ரூ.2,50,000 என மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.10,24,000 மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வழங்கினார். முன்னதாக கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து 543 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் 33 மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஹபிபூர் ரஹ்மான், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் தாமோதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
பிரமநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.